ஊடக அறிக்கை
நுவரெலியாவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகமொன்று
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கிளை அலுவலகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் 08.03.2022 அன்று நுவரெலியாவில் மாவட்ட அலுவலகமொன்றை குயின் எலிசபெத் கட்டிடத்தில் திறக்கவுள்ளது. இலங்கையில் வாழும் இனக்குழுக்கள் மத்தியில் இந்திய வம்சாவளி தமிழ் இனத்தவரும் முக்கியமானவர்கள். இக்குழுக்கள் 19ஆம் நூற்றாண்டில் இலங்கையை ஆண்ட ஆங்கிலேய ஆட்சியாளர்களால் தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு நாட்டில் இயங்கி வந்த பெருந்தோட்ட துறையில் பணிக்கமர்த்தப்பட்டனர். இக்குழுவானது நாட்டின் சமூக பொருளாதரீதியாக மிகவும் பின்தங்கி மிக ஏழ்மைநிலையில் வாழ்ந்துவருகின்றனர். மேலும் இக்குழுவில் அதிக கவனம் செலுத்தி அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும், உரிமை மீறல்களின் போது எளிதாக அவர்கள் தங்களது பிரதேசத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு சென்று மீறல் சம்பந்தமான முறைப்பாட்டை மேற்கொள்வதற்கு வழி வகுக்கும் வகையில் இந்த அலுவலகம் தாபிக்கப்படவுள்ளது.
இவ் அலுவலகத்தின் திறப்பு நிகழ்வானது இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் எஸ்.ஈ ஸ்கொக் அவர்களினால் திறந்துவைக்கப்படவுள்ளதுடன், இந்நிகழ்வானது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளரும் முன்னால் உயர் நீதிமன்ற நீதியரசருமான ரோஹினி மாரசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. அந்நிகழ்விற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களான சங்கைக்குரிய கலுபஹன பியரத்தன ஹிமி, கலாநிதி. விஜித நானயக்கார, வைத்தியர். நிமல் கருணாசிறி மற்றும் செல்வி. அனுஷியா சண்முகநாதன் ஆகியோருடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்வோடு ஒட்டியதாக மார்ச் மாதம் 08ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூறும் முகமாக நுவரெலியாவை மையப்படுத்தி நிகழ்வை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வு நுவரெலிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மார்ச் மாதம் 08ஆம் திகதி மு.ப. 09.30 முதல் பி.ப 01.00 மணிவரை நடைபெறும். இதில் “நிலைபேறான எதிர்காலத்திற்காக இன்றே பால்நிலை சமத்துவத்திற்காக பாடுபடுவோம்” எனும் தொனிப்பொருளில் இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்ஸ்தானி எஸ்.ஈ ஸ்கொக் அவர்களினால் பிரதான உரை நிகழ்த்தப்படவுள்ளது. இந்நிகழ்வில் அரச பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளும் பங்கேட்கவுள்ளனர்.
நுவரெலியாவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மாவட்ட அலுவலகமொன்று