இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொழும்பு தலைமையகத்தில் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்களுக்கும் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கும் இடையில் ஒரு திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் ஆணைக்குழுவின் பிரதேச உத்தியோகத்தர்கள் தேசிய மனித உரிமைகள் நிறுவகங்களின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு மனித உரிமைகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் ஆசிய பசுபிக் மன்று மற்றும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (யுஎன்டிபி) அமுல்படுத்தும் மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிகழ்ச்சித் திட்டம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்குபற்றி மனித உரிமைகள் தொடர்பாகத் தற்பொழுது இடம்பெறும் விடயங்கள் பற்றி ஆராய்ந்தனர்.
இக்கலந்துரையாடல் மும்மொழி மொழிபெயர்ப்புடன் இடம்பெற்றமை இதன் முக்கிய அம்சமாகும். இதன்மூலம் கலந்து கொண்டவர்கள் தமது தாய் மொழியில் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கிட்டியது.
ICC, OHCHR, APF ஆகியவற்றின் பிரதிநிதிகளுக்குத் தலைமை வகித்த பேராசிரியர் கிறிஸ் சிடொத்தி அவர்கள் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
தேசிய மனித உரிமைகள் நிறுவகங்கள் பின்பற்றக்கூடிய சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தரநியமங்கள் எனும் தலைப்பில் செல்வி றொசலின் நூனான் அவர்கள் விசேட உரையாற்றினார். தேசிய நிறுவகங்களின் நிலைப்பாட்டை முதன்மைப்படுத்திக் கூறும் பாரிஸ் கோட்பாடுகளை 1993 இல் ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொண்டது. தற்பொழுது சுமார் 70 தேசிய மனித உரிமை நிறுவகங்கள் இருப்பதாக இவர் தெரிவித்தார். மனித உரிமை நிறுவனங்கள் மனித உரிமை விடயங்கள் தொடர்பான சவால்களை எதிர்கொள்ளும் வகையில் தமது அநுபவங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் ஐ.நா நிறுவனங்களுக்கும் உள்@ர் அமைப்புக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயற்பட முடியும் என மேலும் அவர் கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் செயலாளர்நாயகமாகிய திரு.கே.எஸ் மணி அவர்கள் இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற காலம் முதல் மனித உரிமைக் கோட்பாடுகள் எவ்விதம் பரிணாம வளர்ச்சி பெற்று வந்தன என்றும் இறுதியில் காத்திரமான முழுமையான மனித உரிமைக் கோட்பாடுகளாக அவை வளர்ச்சி பெற்றதன் வரலாற்றுப் பின்னணி பற்றியும் விளக்கமளித்தார். தேசிய மனித உரிமை நிறுவனங்களின் நிலைப்படுத்தல்கள் பாரிஸ் கோட்பாட்டைப் பின்பற்றியவையாயுள்ளன. தற்போது அரசாங்கங்கள் மனித உரிமைகளைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளன. ஏனெனில் மனித உரிமைகள் மீறப்பட்ட குற்றச்சாட்டு காரணமாக உலகின் பல அரசாங்கங்கள் பாரிய நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன. ஆகவே மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுவது அவசியம் எனக் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
இக்கலந்துரையாடலில் தீமோர் யுஎன்டிபியைச் சேர்ந்த செல்வி. அலிசன் ராயன் இலங்கை யுஎன்டிபியைச் சேர்ந்த செல்வி தனுஜா நவரத்ன ஆகியோரும் உரையாற்றினர். இவர்களுடன் இமஉஆகு வைச் சேர்ந்த பல உத்தியோகத்தர்களும் இங்கு உரையாற்றியிருந்தனர்.
பெப்ரவரி 2011இல் புதிய ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்டது முதல் இமஉஆகு மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்கள் பற்றி அதன் சட்டப்பிரிவின் மேலதிக செயலாளர் நிமால் புஞ்சிகேவா அவர்கள் கலந்து கொண்டவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் எடுத்துரைத்தார். பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி இமஉஆகு தயாரித்த கொள்கைப் பத்திரத்தை இலங்கை அரசாங்கமும் அங்கீகரித்துள்ளது. முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்வதற்காக வேண்டி புனர்வாழ்வு நிலையங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் இமஉஆகு உத்தியோகத்தர்கள் கிரமமாக விஜயம் செய்கின்றனர். அதுமட்டுமன்றி சர்வதேச மனித உரிமைகளின் தராதரத்திற்கு ஏற்ப தன்னுடைய ஆற்றலையும் விருத்தி செய்வதில் இமஉஆகு எப்பொழுதும் ஈடுபட்ட வருகின்றது என இவர் மேலும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தைத் தொடர்ந்து ஆற்றல் மதிப்பீடு தொடர்பாக இமஉஆகு ICC, OHCHR மற்றும் யுஎன்டிபி ஆகியவற்றின் உத்தியோகத்தர்களுக்கிடையே கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.


